திருப்புவனம் அருகே வருடக்கணக்கில் ஆக்கிரமிப்பில் இருந்த ஊரணிகள், வரத்துக் கால்வாய்கள் மீட்பு மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு
சிவகங்கை


 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்துள்ளது தஞ்சாக்கூர் மற்றும் கட்டிக்குளம், மாரநாடு, ஆலடிநத்தம், விளத்தூர், கிள்ளுகுடி, சுள்ளங்குடி, கச்சநத்தம் ஆகிய கிராமங்கள். இந்த 8-கிராமங்களில் உள்ள ஊரணிகள் மற்றும் வரத்துக்கால்வாய்களை சிலர் வருட கணக்கில் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் வந்து சேராமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை உணர்ந்த தஞ்சாக்கூரைச் சேர்ந்த சமூக ஆர்;வலரும் கோவில் பூசாரியுமான பாலசுப்பிரமணியன் என்பவர் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் செய்தும் பலன் இல்லை. 

 

 

இதனால் அவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு சாதகமான தீர்;ப்பை தந்ததால் அவர் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை சந்தித்து மனுச் செய்தார். நீதிமன்ற தீர்ப்பின் படியும், கோவில் பூசாரியின் ஆர்வத்தையும் ஏற்று மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்தப்பகுதிக்கு 10-அரசு ஜேசிபி இயந்திரங்களையும், 8-கிட்டாச்சி இயந்திரங்களையும் அனுப்பி வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.   

 

 

அதன்படி அந்த 8-கிராம பகுதிகளில் இருந்த 32-ஊரணிகள், 50-க்கும் மேற்பட்ட வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. இந்த சம்பவங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி கோவில் பூசாரி மீது 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. தற்போது வன்னான் ஊரணி -2, தோப்புக்காரர் ஊரணி, கண்ணாத்தாள் ஊரணி உள்ளிட்ட பல்வேறு ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இதில் கட்டிக்குளம் கிராமத்தில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த 4-ஏக்கர் விவசாய நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதே போல் அந்த பகுதியில் சுமார் 150-ஏக்கர் பரப்பு மீட்கப்பட்டு மராமத்து செய்யப்பட்டுள்ளது. 10-கிலோமீட்டர் தூரம் 40-அடி கால்வாய் ஆக்கிரமிப்பில் இருந்தது சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் கரையில் தற்போது தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரையும், கோவில் பூசாரியையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்