வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய வாய்ப்புள்ளதால், 2 நாட்களுக்கு மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடலோர பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது இன்று குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்று வலுப்பெறும்.
இதைத் தொடர்ந்து தாழ்வுப்பகுதியானது தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து நாளை நள்ளிரவு (31-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுதவிர ஒரு சில பகுதிகளில் மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் அடுத்த 3 நாட்கள் தென்மேற்கு வங்கக்கடல் மன்னார்வளைகுடா, குமரி கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது. 4 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை பெய்தது.
அதன்பின்னர் விட்டு விட்டு ஒரு சில பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனத்திலும் ஆட்டோவிலும், பள்ளி வாகனத்திலும் அனுப்புவதில் கஷ்டப்பட்டனர். ஆனாலும் சிறிது நேரத்தில் மழை விட்டு விட்டதால் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்றனர்.
அதிகாலையில் பெய்த மழையால் காலையில் அதிகம் தண்ணீர் தேங்கவில்லை.
சென்னையில் பல்வேறு இடங்களில் தீபாவளி குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் கிடந்தன. தீபாவளிக்கு முந்தைய நாளில் இருந்து 3 நாட்களாக முறையாக குப்பை எடுக்கப்படாததால் பட்டாசு கழிவுகள் சாலைகளிலும், தெரு வீதிகளிலும் கிடக்கின்றன.
இது மழை நீர் வடிய விடாமல் தடுக்கின்றன. துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியை மழைக் காலத்தில் சரியாக செய்யாததால் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், வண்ணாரப்பேட்டை, மூலக்கடை பகுதிகளில் அதிகளவு குப்பைகள் கிடக்கின்றன.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய வாய்ப்புள்ளதால், 2 நாட்களுக்கு மழை